முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Featured post

இணையத்தில்.. (Click here)

கௌரி அனந்தனின்  கனவுகளைத் தேடி  மற்றும்  பெயரிலி  நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)   by Gowri Ananthan Link:   https://www.amazon.com/dp/B06XDZWNMJ பெயரிலி / Peyarili (Tamil Edition)   by Gowri Ananthan Link:  https://www.amazon.com/dp/B06XF1YQD4

பாரதி கண்ணம்மா : நல்லதோர் வீணைசெய்தே

இதுதான் அவரின் அறை. பூட்டியிருக்குமா? தட்டலாமா? வேறு யாரவது இருப்பார்களா? நெஞ்சு  படபடவென்றது. மெதுவாக கைப்பிடியை திருகிப் பார்த்தாள். திறந்தேயிருந்தது. தொண்டைவரை வந்துவிட்ட மகிழ்ச்சியை விழுங்கிக்கொண்டு உள்ளே எட்டிப் பார்த்தாள். ஒரேயொரு கட்டில் தானிருந்தது. அதன் மேல் கிழிந்துபோன துணியாய் அது.. அவனேதான்.
நல்லதோர் வீணைசெய்தே-அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
கடவுளே இந்தக் கோலத்தைப் பார்க்கத்தான் இத்தனை கடல் தாண்டி மலை தாண்டி வந்தாளா? எதற்காய் இவனுக்கு இப்படி ஒரு பெரிய தண்டனையைக் கொடுத்தாய், ஆண்டவா.. கண்களை நீர் மறைத்தது. இந்தக் கோலத்தில் அவன் என்னைப் பார்ப்பதை விரும்புவானா? இல்லை. விரும்பியோ விரும்பாமலோ இத்தனை கஷ்டப்பட்டு வந்தாயிற்று. ஒருதரம் அவனது கைகளைத்தன்னும் தொட்டுப் பார்த்துவிட்டு ஓடிடணும்.

சத்தம் போடாமல் மெதுவாய் அடிமேல் அடிவைத்து அவனருகில் சென்றாள். அவன் வலியால் முனகுவது போலிருந்தது. தலையை மெதுவாய் தடவிவிட்டாள். முறுவலித்தான். இந்த நேரத்திலும் இந்தச் சிரிப்புக்கொண்டும் குறைச்சலில்லை. கோபமாய் வந்தது. குனிந்து நெற்றியில் முத்தமிட்டாள். உடலில் சற்றே அசைவு தெரிந்தது. போய் விடலாமா? திரும்பியவளின் கரத்தைப் பற்றியது.. அவனேதான்.
விசையுறு பந்தினைப்போல்-உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
இறுகப் பற்றிய கரங்களில் முந்தைய இறுக்கம் இல்லை, ஆனால் அதே ஸ்பரிசம் அவளை சிலிர்க்கச் செய்தது. தயங்கித் திரும்பினாள். அந்தக் கண்கள்... "கண்ணம்மா.." அவன் உதடுகள் துடித்தன. அதற்குமேலும் அவளால் தாங்க முடியவில்லை. அவனை இறுகக் கட்டி முத்தமழை பொழிந்தாள். "என்னம்மா இது..?" சொல்லிக்கொண்டே அவன் எழுந்திருக்க முயற்ச்சித்தான். கைலாவகம் குடுத்து தலையணியை நிமிர்த்தி இருப்பதுக்கு வசதி செய்து கொடுத்தாள். அவனைப் பாக்கப் பார்க்க அழுகையளுகையாய் வந்தது. அழவே கூடாது என்ற வைராக்கியத்துடன் தான் வந்திருந்தாள். ஆனால் முடியவில்லை.

"இங்கை வா." வந்து அருகிலிருக்கும்படி சைகை செய்தான். இருந்தாள். அவள் கைகளைப் பற்றி முத்தமிட்டான்.
தசையினைத் தீசுடினும்-சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
"எனக்குத்தெரியும் நீ வருவாய் எண்டு. ஆனால் இவ்வளவு கெதியா வருவாய் எண்டு எதிர்பார்க்கேல்லை." சீக்கிரமா? இதுவே ரொம்ப late எண்டு நினைத்திருந்தாளே.
"என்ன விளங்கேல்லையா?" இல்லையென்று தலையாட்டினாள்.
அசைவறு மதிகேட்டேன்;-இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?
"நீ இப்ப வராட்டாலும் என் நினைவுகள் என்றாவது ஒருநாள் உன்னை இங்கை வரவைத்திருக்கும்."  அதற்க்கு மேலும் அவளால் தாங்க முடியவில்லை. விம்மி விம்மி அழுதாள்.

சற்று நேரம் மௌனமாயிருந்தவன், "நீ அண்டைக்குப் பார்த்தது போலத்தான். இன்னும் சின்னப் பிள்ளையாகவே இருக்கிறாய். நான் விட்டுப்  போனதில் தப்பில்லை தானே?" அதிர்ந்து போனாள். அப்போ.. அவன் அதற்காய் வருந்தியிருக்கிரானா?
கண்ணத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
கள்வெறி கொள்ளு தடீ !
உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா !
உன்மத்த மகுதடீ !
"அப்ப நான் வயசாயிட்டுதுஎண்டு பொய் சொல்லியிருக்கக் கூடாதுதான். ஆனால் உங்களோடை வாறத்துக்கு எனக்கு வேறைவழி தெரியேல்லை அதான்.."

"தெரியும். உனக்கு என்னைப் பிடிச்சிருந்தது. அதனாலேயே போராட்டத்தைப் பிடித்ததுபோல் ஒரு மாயை, அவ்வளவு தான். அப்பிடியே அண்டைக்கு நீ  வந்திருந்தாலும் உன்னால அங்கை கனநாள் தாக்குபிடித்திருக்க முடியாது." என்றவன் இருமல் வரவும் சற்று நிறுத்தினான். அவள் அசையாதிருந்தாள்.

"பிறகு மூண்டு வருசத்தால மடுவுக்கு வந்திருந்தனான்.." அவள் எந்த சலனமேயில்லாமலிருக்கவும் தொடர்ந்து "ஆனால் உன்னைப் பாக்க முடியேல்லை. வாகனத்தை உள்ளுக்கை விடமாட்டம் எண்டு தேவாலையத்திலை சொல்லிட்டினம். அதாலை அவசரமாப் போகவேணும் எண்டதால அத்தானைத்தான் பாத்திட்டு சொல்லிட்டுப் போனனான். சொன்னவரே?" தலையாட்டினாள். "உங்களுக்கு கலியானமாயிட்டுது எண்டு சொன்னவர்." அவள் கண்களோரம் நீர் வழிந்தது.

எப்படி மறப்பாள் அந்த நாளை? கிட்டத்தட்ட ஒரு மறுபிறவி மாதிரி. அவள் அப்பா அவளுக்கு தபால் அடையாளஅட்டை எடுப்பதுக்கு படமேடுக்கவேனும் எண்டுசொல்லி மோட்டார் சைக்கிளில் பின்னாலிருத்திக் கூட்டிப்போகையில்தான் சொல்லிக்கொண்டு போனார். எதோ பெரிய தாக்குதலாம், போகினமாம்.. அதாம் இதாம் என்று அவர் முதலில் சொல்லத்தொடங்கியபோது அவளுக்கு  எதுவுமே புரியவில்லை. கடைசியில் அவர் ஒருவழியாக சொல்லி முடித்தபோது ஒருவாறு புரிந்துகொண்டவளுக்கு இன்னும் ஏன் உயிருடனிருக்கிறோம் என்பதுதான்  புரியவில்லை. இனி அவளைத்தேடி அவன் ஒருபோதும் வரமாட்டான் என்ற நினைப்பையே அவளால் தாங்கமுடியவில்லை.

ஒவ்வொரு நிமிடமும்
தொண்டை குழிக்குள்
சிக்கும் வார்த்தைகள் அடைபட்டு
கண்களின் ஓரம் நீராய் கசிகின்றது...


எதிர்பார்த்த முடிவிலும் கூட
எதிர்பாராது மனம் தடுமாறுகிறது
நாளை என்பது வெறும் வார்த்தை; அது
நேற்றோடு கரைந்து போனதறிவேன்..
இருந்தும் நீ தருவதாலேயே
இந்த வலி கூட பிடித்திருக்கு...

அப்போது சுள்ளென்று முகத்திலடித்த எதிர்க்காற்று அவள் கண்ணீரக் காயவைத்து, கூந்தலை மெதுவாய் வருடிச்சென்று அவள் காதுகளில் ரகசியமாய் பாரதியின்வரிகளை கிசுகிசுத்தபோது.. அந்த இயற்கையன்னையின் மடியில் அவனது வரிகளுக்குள்ளே அவள் ஒரு புதுவாழ்க்கையை வாழத் தொடங்கிவிட்டிருந்தாள்.

அவன் வெளியே வெறித்துப் பார்த்தான். தூரத்தில் சூரியோதையம் கண்ணைப் பறித்தது. ஆனால் அதை ரசிக்கும் நிலையில் அவளில்லை. "உங்களுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டன் எண்டு முடிவு பண்ணிட்டிங்கள். அதுதானே.." அவளால் மேற்கொண்டு பேச முடியவில்லை. மௌனமாய் கண்ணீர் சிந்தினாள்.
உன்கண்ணில் நீர்வழிந்தால் - எந்நெஞ்சில்
உதிரம் கொட்டு தடீ !
"கண்ணம்மா.." சற்றும் பிசிறில்லாத குரலில், "உனக்கு ஏன் என்னைப் பிடிச்சுது?" தடுமாறினாள். இந்தக் கேள்வியை அவள் சற்றும் எதிர் பார்க்கவில்லை. ஒருத்தரை பிடிக்காமல் போவதற்கு ஆயிரம் காரணமிருக்கும், ஆனால் பிடிப்பதுக்கு.. ஆ.. ஒரு பார்வை போதுமே..

"நீங்க.. அந்தப் பார்வை. அது.. எனக்குள்ளை எதோ செய்தது. நீங்கள் தான் எனக்குரியவர் எண்டு அந்த நிமிஷம் தோன்றியது. பிறகு.." தொண்டை அடைத்துக்கொண்டது. அவன் முறுவலித்தான்.
எங்கண்ணிற் பாவையன்றோ ? - கண்ணம்மா !
என்னுயிர் நின்ன தன்றோ ?
"அப்படியில்லை கண்ணம்மா.. அதுவரை நீ பார்த்த ஆண்களில் நான் உனக்கு வித்தியாசமாகத் தெரிஞ்சன். உன் உணர்வுகளைப் புரிந்துகொண்டவனாக.. அவற்றிற்கு மதிப்பளிப்பவனாக.. அதனாலையே காலம் முழுவதும் சந்தோசமாய் வைத்திருப்பான், உள்ளங்கையில் வைத்துத் தாங்குவான் என்று நினைத்திருப்பாய். ஆனால் வாழ்க்கை என்பது அப்பிடியில்லை கண்ணம்மா.. அதிலும் போராட்டவாழ்க்கை என்றது நீ நினைக்கிறமாதிரி ராணிகாமிக்ஸ்ல வார மாயாவி கதையில்லை. விளங்குதே?" அவள் மௌனமாயிருக்கவும் அவனே தொடர்ந்து "உனக்கு நான் ஒரு கதை சொல்லறன் கேக்கிறியா?" என்றவன் அவள் பதிலுக்குக் காத்திராமல் சொல்லத்தொடங்கினான்.
இன்ப கதைகளெல்லாம் - உன்னைப்போல்
ஏடுகள் சொல்வ துண்டோ ?
அன்பு தருவதிலே - உனைநேர்
ஆகுமோர் தெய்வ முண்டோ ?
"ஒரு சமயம் அர்ஜுனன் தவம் செய்துகொண்டிருந்த நேரத்திலை, ஒரு பெண் வந்து அவன்மேல ஆசைப்பட்டு அவன் சம்மதம் கேட்கிறாள். அவனுக்கு தர்மசங்கடமான சூழ்நிலை." என்று நிறுத்தியவன் அவள் ஏனெனப் பார்க்கவும் தொடர்ந்தான். "அது ஏனென்று  ஓஷோ சொல்கிறார் கேள். நால்வகை குணங்களும் தன்னகத்தே கொண்ட ஒரு அழகான பெண், அவனை உயிருக்குயிராய் காதலிக்கும் ஒரே காரணத்தினால் தனது இயல்பு நிலையிலிருந்து பிறழ்ந்து, வலியவந்து தனது விருப்பத்தைக் கூறுமிடத்து, அதை மறுதலிப்பது  தனது ஆண்மைக்கு இழுக்கு என்று கருதுகிறான்." அவளுக்குப் புரியவில்லை என்ன சொல்லவருகிறான்?
"அதாலை..?"
"உனக்கு நான் என்ன சொல்ல வாறன் எண்டு விளங்கியிருக்குமெண்டு நினைக்கிறன்." சாட்டையாலடித்தது போலிருந்தது அவன் பதில். அப்போ அவளைப் பிடித்து இல்லையா.. வெறும்.. சே.. இதைக் கேட்கத்தான் இத்தனை நாள் தவம் கிடந்தாளா..?

"எனக்கு காம்பஸ்க்கு நேரமாயிட்டுது. நான் போறன்." அவன் கைகள் விட்டபாடில்லை. அன்று சொர்க்கமாயிருன்தது, இன்று உடல் கூசியது. வெடுக்கென்று பறித்துக்கொண்டு வெளியேறினாள்.

***** 

கருத்துகள்

ஜேகே இவ்வாறு கூறியுள்ளார்…
அர்ஜுனனின் தர்மசங்கடம், தவத்தை அந்த நேரத்தில் போய் கலைப்பதா என்பது தான். அது அவளுக்கு புரியவில்லை பாவம் .. nice!

அசைவறு மதிகேட்டேன்;-இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

இடம் நன்றாக இருக்கிறது. ஆனாலும் கவிதைகள் கொஞ்சம் ஓவர் டோஸ் போல் எனக்கு படுகிறது! உங்கள் ஆட்டம் .. நீங்கள் அடிச்சு ஆடலாம் மேடம்!
Gowri Ananthan இவ்வாறு கூறியுள்ளார்…
//ஆனாலும் கவிதைகள் கொஞ்சம் ஓவர் டோஸ் போல் எனக்கு படுகிறது! //
நானும் கூட முதலில் நினைத்தேன் தான் கொஞ்சம் குறைத்திருக்கலாம் என்று. ஆனால் என்னைப் பொறுத்தவரை அந்தக் கவிதைகள் தான் அவளது மனதுக்குள் கேட்க்கும் ஒலி. அவள் உயிர் மூச்சு. அதனால் தான் இரண்டாவது பதிவிலேயே கொஞ்சம் விரிவாக அதற்க்கான காரணத்தைச் சொல்லியிருந்தேன்.
"அவளுக்கு எல்லாமே பாரதிதான். பன்னிரண்டு வயசிலை "அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்" என்று அவள் காதோரம் ஒலித்துச்சென்ற பாரதியின் வரிகளைக் கேட்டதிலிருந்து எப்போதுமே அவளுக்குள் ஒருபாரதி ஏதாவது ஒரு கவிதை சொல்லிக்கொண்டுதானிருப்பான்."
அவளை பாரதி எவ்வளவு தூரம் பாதித்தான் என்பதை பின்னர் "நல்லதோர் வீணை செய்தே" என்ற பதிவில் இவ்வாறு சொல்லியிருப்பேன் "அப்போது முகத்திலடித்த எதிர்க்காற்று அவள் கண்ணீரக் காயவைத்து, கூந்தலை மெதுவாய் வருடிச்சென்று அவள் காதுகளில் ரகசியமாய் பாரதியின்வரிகளை கிசுகிசுத்தபோது.. அந்த இயற்கையன்னையின் மடியில் அவனது வரிகளுக்குள்ளே அவள் ஒரு புதுவாழ்க்கையை வாழத் தொடங்கிவிட்டிருந்தாள்."

இன்னும் விரிவாகச் சொல்லப் போனால் அவள் பல இடங்களில் அதை தனது வலிகளிலிருந்து தப்புவதற்காய் உபயோகப் படுத்துகிறாள்.
உதாரணத்துக்கு இதில் கீழே தரப்பட்டு நான்குவரிகளையும் அவன் சொல்லவில்லை. கண்களால் கூட சொல்லவில்லை. ஆனால் அந்த இடத்தில் அவன் அப்படிச் சொல்லி தன்னைத் தேற்றுவதுபோல் கற்பனை செய்துகொள்கிறாள்.
உன்கண்ணில் நீர்வழிந்தால் - எந்நெஞ்சில்
உதிரம் கொட்டு தடீ !
எங்கண்ணிற் பாவையன்றோ ? - கண்ணம்மா !
என்னுயிர் நின்ன தன்றோ ?

//அர்ஜுனனின் தர்மசங்கடம், தவத்தை அந்த நேரத்தில் போய் கலைப்பதா என்பது தான். அது அவளுக்கு புரியவில்லை பாவம் .. nice!//
நன்றி . அவளின் அந்த உணர்வுபூர்வமான, சற்றே குழந்தைத்தனமான தேடலுக்கு வெறும் வார்த்தைகளால் எப்படி பதிசொல்வதேன்று எனக்குத் தெரியவில்லை. அதனால் தான் அர்ஜுனை நுழைத்துவிட்டேன்.

பிரபலமான இடுகைகள்